ஆலய வரலாறு

முள்ளியவளைக் காட்டு(டா) விநாயகர்:

 ஈழ வளத் திருநாட்டில் முல்லையும் மருதமும் நெய்தலும் ஒருங்கே சேரப்பெற்ற முல்லை மாநாகரின் மருதமுடன் நெய்தலை தனதாக்கி குழுமைகொண்டு குடியிருக்கும் முள்ளி மாநகர் என சோழப்பேரரசு காலத்தில் அழைக்கப்பட்ட முள்ளியவளைப் பதியில் நீண்ட நெடுங்காலமாக கோயில் கொண்டு அருள் மழைபொழியும் அருள்மிகு காட்டு விநாயகப் பெருமான் வரலாற்றை நோக்கிடுவோம்.

6ம் பரராஜசேகரன் ஆண்ட காலத்தில் அதாவது  1506ம் ஆண்டு இவ் ஆலயம்  புனரமைக்கப்பட்டதாகவும் இதற்கு முற்பட்ட சோழப்பேரரசு காலம் தொடக்கம் பழமையான ஆலயமாக கருதப்படுகின்றது. (யாழ்ப்பாண வைபவமாலை மற்றும்  வையாபாடல் போன்ற வரலாற்று நூல்களால் இவை சான்றுபடுத்தப்பட்டுள்ளது)

ஒளவைக்கு அருள் புரிந்த விநாயகப் பெருமான் காட்டு விநாயகர் எனும் பெயரில் முள்ளியவளைப் பதியில் அமர்ந்திருந்து பக்தர்களுக்கு அருள் புரிந்து கொண்டிருக்கின்றார்.

சோழப்பேரரசு காலம்:(செவிவழிக்கதை)

இவர் காட்டு விநாயகனாக இருந்து காட்டா விநாயகனாக பெயர் பெற்றார் என்பது செவி வழிக் கதைகள் மூலம் அறிய முடிகிறது. சோழப்பேரரசு காலத்தில் முள்ளியவளைப் பகுதியில் தங்கியிருந்த சோழப்படையினரை காண்பதற்காக இந்தியாவிலிருந்து வந்த படைவீரர்களின் மனைவிமார்களுக்கு தலைமை தாங்கிய “வெள்ளைக்கை நாச்சியார்” என்னும் விநாயக அடியவர் ஒருவரால் சங்கராச் சாரியார் என்னும் ஞானி ஒருவரின் அருள் வாக்கிற்கு அமைய முள்ளியவளை மக்கள் செய்த புண்ணிய பயனால் வன்னி அரசர் காலத்தில் முள்ளியவளைக்கு விநாயகர் கொண்டு வரப்பட்டுள்ளார்.

முள்ளியவளைக்கு கொண்டு வரப்பட்ட விநாயகர் விக்கிரகமானது தற்போதுள்ள காட்டு விநாயகர் ஆலயத்திற்கு தெற்கு புறமாகக் கிட்டத்தட்ட 500மீற்றர் தூரத்தில் இருக்கும் மணற்குளம் என்னும் பகுதியில் வைத்து வணங்கப்பட்டு வந்தது. விநாயகர் வைக்கப்கட்ட பகுதி காட்டுப்பிரதேசமாக இருந்தமையால் இவ் விநாயகர் “காட்டு விநாயகர்” என்னும் பெயரைப் பெற்றிருந்தார்.

கால ஓட்டத்தில் இவ்விடம் அழிவடைய இந்த விநாயகர் விக்கிரகமும் மக்கள் கண்ணில் சிக்காமல் மறைந்து போயிற்று.அக்காலத்தில் தற்போதுள்ள விநாயகர் ஆலயத்தை அண்டியுள்ள நூற்றிற்கும் மேற்பட்ட நிலங்கள் விவசாய நிலங்களாகவே இருந்தன. இவ் விவசாய செய்கைக்கு மணற்குளத்தில் இருந்து நீர் வழங்கப்பட்டு   வந்துள்ளது. தற்போதும் இங்கு குறிப்பிட்ட பகுதி மழை காலத்தில் நீர் ஊறிப் பாய்வதை நாம் காணக்கூடியதாக உள்ளது.

இக்காலத்தில் யாழ்ப்பாணத்தை அரசாண்ட மன்னர்களில் ஒருவரான பரராச சேகரன் என்பவன் தன் ஆட்சியை விரிவு படுத்துவதற்காக முள்ளியவளையில் தற்போதுள்ள காட்டா விநாயகர் ஆலயத்திற்கு கிழக்குப் புறமாக உள்ள மேட்டுப் பகுதியில் தனக்கென ஒரு கோட்டையும் பரிவாரங்கட்கான வசதிகளும் செய்து கொண்டிருந்தான். இப்போதும் கோட்டை அமைந்துள்ள இடம் கோட்டைப்பிட்டி என்று சொல்லப்படுவதுடன் கோட்டையில் காவல் தெய்வமான ஜயனார் ஆலயம் அமைந்துள்ளமையால் வழிபாடுகள் பாரம்பரியமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இக்கால நேரத்தில் தற்போது கோவில் அமைந்துள்ள இடம் வயல் நிலமாக இருந்தமையால் விவசாயி ஒருவர் வயல் உழும் போது உழவு கலப்பையில் மறைந்து போன காட்டு விநாயகர் விக்கிரகம் சிக்குண்டு மேலே வந்துள்ளது. இதனைக் கண்ட மக்கள் ஒன்று கூடி தங்கள் காட்டு விநாயகப் பெருமான் கிடைத்து விட்டார் எனப் பூரிப்படைந்தனர்.வெள்ளைக்கை நாச்சியாரால் கொண்டு வரப்பட்ட விநாயகர் விக்கிரகம் என அறிந்து அந்த இடத்திலேயே ஒரு கோவில் கட்டி அதே விக்கிரகத்தைப் பிரதிஸ்டை செய்ய முடிவெடுத்தான் பரராச சேகர மன்னன். தன் முடிவின் படி உடனடியாகவே கோவில் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன. அமைக்கப்பட்ட கோவிலும் கட்டப்பட்ட கோட்டையும் ஒன்றை ஒன்று பார்த்த வண்ணம் இருந்தன.

அரசன் தன் கோட்டை வாசலில் நின்று விநாயகப் பெருமானின் மூலஸ்தானத்தைப் பார்த்து வழிபட்டான் என அறிய முடிகிறது. இவ் விநாயகர் காட்டு விநாயகராகவே பெயர் கொண்டிருந்தார்.

1505 முதல் 1658 காலப் பகுதியில் இலங்கையில் தனது நிர்வாகத்தைக் கொண்டிருந்த போர்த்துக்கேயர் காலத்தில் கந்தன் என்பவனை அவன் செய்த ஏதோ தவறிற்காக அவனைக் கைது செய்யும் நோக்கில் போர்த்துக்கேயப் படையினர் அவனை துரத்திச் சென்றனர்.

அவர்களிடமிருந்து தப்பித்துக் கொள்வதற்காக ஓடிய போது இந்தக் காட்டு விநாயகன் கோவிலடிக்கு வந்துள்ளான். கோவில் வாசலுக்கு நேரே நின்ற அரச மரத்தோடு நின்ற கொன்றை மரத்தில் ஏறி அடர்த்தியான பகுதியில் தன்னை மறைத்துக்கொண்டு தன்னைக் காட்டிக் கொடுக்க வேண்டாம் என விநாயகப் பெருமானை வேண்டிக்கொண்டான்.படையினர் அந்த மரத்தின் கீழ் வந்து நின்று கந்தன் எங்கே போனான் எனத் தெரியாமல் அல்லற்படும் போது மரத்தில் இருந்த குழவிக்கூடு கலைந்து குழவிகள் பறங்கிப் படையினரைத் தாக்கித் துரத்தியதாகவும். இந்த மரத்தில் கந்தன் மறைந்திருப்பானோ என மரத்தை அண்ணாந்து பார்த்த போது கந்தன் குளவிக் கூடாக  படையினர்க்கு காட்சி கொடுத்ததாகவும் இரு கதைகள் மக்களிடையே பேசப்பட்டு வருகிறது.

எது எப்படி இருப்பினும் கந்தனைக் காட்டு விநாயகப் பெருமான் பறங்கியர்களிடம் இருந்து காப்பாற்றியுள்ளார் என்பது வரலாற்று உண்மை. விநாயகப் பெருமானால் காப்பாற்றப்பட்ட கந்தன் தன்னைக் காப்பாற்றி அருள் புரிந்தமைக்காக விநாயகனுக்கு ஒரு மணியினைச் செய்து கொடுத்தான்.

இந்த மணியில் ஒட்டிய எழுத்தால் “நினைவன் கந்தன்” எனப் பெயர் பதித்துள்ளான். அந்த எழுத்துக்கள் கல்வெட்டு எழுத்துக்கள் போல் இருந்தாலும் வாசிக்கக் கூடியதாக இருப்பது பெருமைக்குரியது. இப்போது “நி” னாவின் மேல் விசிறி உடைந்து “ந” மட்டும் உள்ளது. இப்போது அதனைப் பார்ப்பவர்கள் நனவன் என உச்சரிக்கின்றார்கள்.

இந்த மணியின் ஓசை நினைவன் கந்தன் நினைவன் கந்தன் என ஒலிப்பதாக மக்கள் மனத்தில் ஒரு பிரேமை. அந்த மணி இப்போதும் கோவிலில் பாதுகாப்பாக உள்ளது. கந்தனைக் காட்டிக்கொடுக்காத காரணத்தால் காட்டு விநாயகனைக் காட்டா விநாயகன் எனப் போற்றி வணங்குகின்றனர்.

பரராச சேகர மன்னனால் கோட்டையும் கோவிலும் கட்டப்பட்டன என்பது வரலாற்று நூலான வையா பாடல் மூலம் அறியக் கிடக்கின்றது.

“இந்த யாழ்ப்பாணமதில் இருக்கவென்றே சித்திரவேல வரையுமீந்து வந்து முள்ளி மாநகரில் கோட்டையுநற் சினகரமும் வகுத்தானே” எனவும்

“முன்னோர்க்குப் புரிபூசை நிதந்தெரிசித் தேமுள்ளி வளையாமூரில் மன்னனான இரவிகுலப் பரராச சேகரனும் வாழ்ந்தானன்றே” எனவும் கூறப்பட்டுள்ளது.

முள்ளியவளை கோட்டை கொத்தலங்களுடன் இருந்தமையால் “முள்ளி மாநகர்” எனக் குறிக்கப்பட்டிருக்கலாம். “சினகரம்” என்பது ஆலயத்தைக் குறிப்பதாகவும் உள்ளது.

பரராச சேகர மன்னன் முள்ளியவளையில் கோட்டை அமைத்து விநாயகப் பெருமானையும் வழிபட்டுக் கொண்டு சிலகாலம் இங்கும் வாழ்ந்தான் என அறிய முடிகிறது. மேலும் இந்தக் காட்டா விநாயகப் பெருமானுக்கு “மூத்த நயிந்தை” என்னும் பெயரும் இருந்ததாக 16ம் நூற்றாணடைச் சேர்ந்த கதிரமலைப் பள்ளின் கடவுள் வணக்கப் பாடல் மூலம் அறியலாம்.

“கந்த மேஷ கார்முகத் தோனே
 கருணை யாகிய சங்கரி மைந்தா
முன்பு போலெனை அன்புவைத் தாளும்
முள்ளியவளை மூத்தநயிந்தை”

 தொகுப்பு மற்றும் கணனி வடிவம்: 
திரு சிவசிதம்பரம் பிரதீபன் (உபசெயலாளர், ஆலய பரிபாலன சபை )

ஆவண உறுதுணை:
திருமதி புவனநாயகி ஐயம்பிள்ளை (ஓய்வுபெற்ற ஆசிரியை)
திரு சி.தியாகராசா (ஓய்வுபெற்ற அதிபர்)
திரு ஆ.முருகுப்பிள்ளை (கலாபூசணம்)

உசாத்துணை நூல்:
 தமிழோசை  (பேராசிரியர் கலநிதி ம.ரகுநாதன் யாழ்பல்கலைக்கழகம்)
அனுசரணை மற்றும் ஆலோசனை: 
திருவாளர் த.பரஞ்திசோதி  (கௌரவ தலைவர், ஆலய பரிபாலன சபை)

 

Sharing is caring!