காட்டு விநாயகர் ஆலய விசாக பொங்கல் 19.05.2019

இலங்கையில் கண்ணகி தெய்வ வழிபாட்டில் மதுரையை எரித்த கண்ணகி இலங்கைக்கு வந்தபோது வந்தமர்ந்து சென்ற இடங்களில் முள்ளியவளைப் பதியில் தந்திமுகன்(காட்டு விநாயகர் ஆலயம்) கோவிலில் வந்தமர்ந்த கண்ணகைதாய் பின் வற்றாப்பளை சென்றமர்ந்த வரலாறுகூறும் சிந்துப்பாடலில்

முந்தித் தடங்கிரியலே பாண்டியன் தன்மதுரையை
முதுகனல் கொளுத்தியே ஒருசிலம் பதனால்
பிந்திவந் தங்கொணா மைக்கடவை தனிலும்
பேரான முள்ளிய வளைப்பதியில் வந்துறைந்தாய்
தந்திமுகன் கோவிலில் வந்துமடை கண்டு
தார்கட லுப்புத் தண்ணீர் விளக்கேற்றி
அந்திப் பொழுதிலே நந்திக் கடற்கரையில்
வைகாசித் திங்களில் வந்தமர்ந்தாயே.

அடவிக் கடற்கரையில் விடுதிவிட வந்தாய்
அழகான மாட்டிடையர் கண்ணில் அகப்பட்டாய்
பாரப்பா என்தலையில் பேனதிகம் என்றாய்
அழகான தலையதனைப் பிளவாய் வகிர்ந்தார்
பாங்கான கண்களோ ராயிரமுண்டு…

எந்தனுக்குப் பசியதிகம் என்றாய்
பால்புக்கை மீட்கப் பறந்திட்டாய் தாயே.

இடைச்சிறுவர்கள் மாடு மேய்த்துக் கொண்டிருக்கும் போது மூதாட்டி ஒருத்தி அவ்விடம் வந்து வேப்பம்படவாளில் இருந்தாள். சிறுவர்கள் மூதாட்டியை வரவேற்று உபசரித்தனர். தனக்குப் பசிக்கிறது என்று சொல்லவே அவர்கள் பாற்புக்கை சமைத்துக் கொடுத்தளர். பொழுதுபட்டு விட்டதனால் விளக்கேற்றுமாறு மூதாட்டி கூறினாள். ஏண்ணெய் இல்லையெனச் சிறுவர்கள் கூறினர். கடல்நீரை அள்ளி எடுத்து விளக்கேற்றுமாறு மூதாட்டி சொன்னாள். அங்ஙனமே அவர்கள் விளக்கேற்றினர். தனது தலையில் பேன் அதிகமாகையால் தலையில் பேன் பார்க்குமாறு மூதாட்டி கேட்டுக் கொண்டாள். சிறுவர்கள் பார்த்த போது தலையில் ஆயிரம் கண்கள் தென்பட்டன. அவர்கள் ஆச்சரியமும் மலைப்புமுற்றனர். திடீரென மூதாட்டி மறைந்து விட்டாள்.

வைகாசி மாதம் வருவேன் ஒரு திங்கள்|| என அசரீரி ஒலித்தது.

இடைச்சிறுவர்கள் இதனை முதியோருக்கு அறிவித்தனர். அவர்கள் முதலில் இதனை நம்ப வில்லை. அவர்கள் அவ்விடத்தில் எங்கும் தேடியும் மூதாட்டியைக் காணவில்லை. மூதாட்டி இருந்த வேப்பம்படவாள் தளிர் வந்திருப்பதைக் கண்டனர். அந்த இடத்தில் சிறு ஆலயம் அமைத்து வழிபாடு செய்தனர்.

வைகாசி மாதத்துப் பூரணையை அண்டிய திங்கட்கிழமை பொங்கல் செய்தனர். அயல் கிராமத்து மக்களும் இவ்வழிபாட்டில் கலந்து கொண்டனர்.

தஞ்சாவூரிலிருந்து பக்தஞானி என்னும் கண்ணகிப் பக்தர் இங்கு வந்தார். இவர் இங்கு கண்ணகி அம்மனுக்குச் செய்யப்படும் சில கிரியை நெறிமுறைகளை அறிமுகப்படுத்தினார். இதற்குத் தேவையான சாதனங்களை இந்தியாவில் இருந்து கொண்டு வந்தார். கிரியை முறைகளை ஏட்டில் எழுதி வைத்தார்.

இவரின் முறைப்படியே இன்று வரையும் பொங்கல் நடைபெறுகின்றது. பக்தஞானி என்னும் அடியார் முள்ளியவளையிலேயே வாழ்ந்தார். இப் பெரியார் சிவபதம் அடைந்த பின்னர் இவரைத் தகனம் செய்த முள்ளியவளை நாவற்காட்டில் இவருக்குப் பொங்கல் செய்வது வழக்கம். வற்றாப்பளைப் பொங்கலுக்குப் பின்னர் வரும் வெள்ளிக்கிழமை பக்தஞானி பொங்கல் நடைபெறும்.

முள்ளியவளை ஈழத்தமிழர் வரலாற்று மூலமாகத் திகழும் வையாபாடலிலும், கதிரையப்பர் பள்ளு என்னும் பிரபந்தத்திலும் குறிப்பிடப்படுகின்றது. வன்னிப்பிரதேசத்திலுள்ள ஏழுவன்னிமைகளில் ஒன்றான முள்ளியவளை வன்னிமை எழுபது கிராமங்களை உள்ளடக்கி இருந்ததாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். முள்ளியவளையிலுள்ள காட்டுவிநாயகர் ஆலயத்தில் பொங்கலுக்கான முன்னோடி நிகழ்ச்சிகள் இடம்பெறத் தொடங்கின. வற்றாப்பளைப் பொங்கலுக்கு முதல் ஏழுநாள் மடைகளும் பொங்கலும் இன்றும் காட்டுவிநாயகர் ஆலயம் என அழைக்கப்படும் மூத்தநயினார் ஆலயத்திலேயே நடைபெற்று வருகின்றன.

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply





shares